இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளார். மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் பி.சி.சி.ஐ. இதை உறுதி செய்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, கில் பேட்டிங் செய்யும்போது தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் பந்தில் ஸ்வீப் ஷாட் அடித்தபோது கழுத்தில் வலியை உணர்ந்தார். 4 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆனார்.
அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கில் பரிசோதனைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டு பங்கேற்க மாட்டார் என்றும் பி.சி.சி.ஐ. மருத்துவ குழு அவரை கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கில் இல்லாத நிலையில் துணைத்தலைவர் ரிஷப் பன்ட், எஞ்சிய ஆட்டங்களுக்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.