ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே பலோடி-தேச்சு சாலையில் அதிகாலையில் நடந்த விபத்தில், வேகமாக வந்த கார் ஒன்று ஒட்டகத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. மோதலின் வேகத்தில் காரின் முன்பகுதி மற்றும் கண்ணாடி உடைந்துபோனதால், ஒட்டகம் பல மணி நேரம் காருக்குள்ளேயே சிக்கியது.
ஜோத்பூரை சேர்ந்த ராம்சிங் என்பவர் ஓட்டிய கார், திடீரென குறுக்கே வந்த ஒட்டகத்தின் மீது மோதியதில், கார் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ராம்சிங் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஒட்டகம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காருக்குள் தவித்தது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு, காரின் முன்பகுதி வெட்டப்பட்டு ஒட்டகம் பத்திரமாக மீட்கப்பட்டது.
பெரிய காயங்கள் எதுவும் இன்றி ஒட்டகம் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.