உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறிய நிலையில் அவர் இதுகுறித்து பேசியுள்ளது பலரையும் வேதனை கொள்ள செய்துள்ளது.
கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டி தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பல நாட்டு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜெர்மனி, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் தோல்வியடைந்து வெளியேறின.
தற்போது நடந்து முடிந்த மொராக்கோ – போர்ச்சுக்கல் இடையேயான தகுதி சுற்றில் போர்ச்சுக்கல் அணி அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி வெளியேறியது.
இதுகுறித்து வேதனையுடன் பேசியுள்ள போர்ச்சுக்கல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோ “போர்ச்சுக்கல் நாட்டிற்காக உலக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என் வாழ்நாளின் மிகப்பெரிய லட்சியம். பல்வேறு சர்வதேச கோப்பைகளை பெற்று தந்திருந்தாலும் உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவு. எனது கனவிற்காக நான் எல்லா வகையிலும் போராடினேன்.
அந்த கனவிற்காக கடந்த 16 ஆண்டுகளில் 5 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று என்னால் ஆனவற்றை செய்தேன். எந்த சூழ்நிலையிலும் என்னுடைய கனவையும் போராட்டத்தையும் விட்டதில்லை. ஆனால் வருந்தும் வகையில் இந்த கனவு முடிந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.