இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், மழை காரணமாக இன்னும் ஆட்டம் தொடங்காமல் இருப்பது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.
இன்னும் ஏழு விக்கெட்டுகளை இந்தியா எடுத்துவிட்டால் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில், இன்று இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஆட்டம், மழை காரணமாக இன்னும் தொடங்காமல் உள்ளது. இன்னும் 536 ரன்கள் ஒரே நாளில் எடுப்பது இங்கிலாந்து அணிக்கு சாத்தியமில்லை என்றாலும், இன்னும் ஏழு விக்கெட்டுகளை எடுப்பது இந்திய அணிக்கு சாத்தியம் என்பதால், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது.
ஆனால், மழை காரணமாக தொடர்ச்சியாக ஆட்டம் தடைப்பட்டு, இன்றைய நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, இந்தப் போட்டி 'டிரா' என அறிவிக்கப்படும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இருப்பினும், மழை இன்னும் சிறிது நேரத்தில் நின்றுவிட்டால் ஆட்டம் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.