இந்த சீசன் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என ராஜஸ்தான் அணி 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அவர் 30 பந்துகளில் அடித்த சாதனை சதம் ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான தருணமாக இடம் பிடித்தது.
இதையடுத்து அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதையடுத்து நான்காவது போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த போட்டியில் 52 பந்துகளில் சதமடித்த அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் வெகு விரைவாகவே சூர்யவன்ஷி அறிமுகமாகி கலக்குவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.