இந்தியாவில் நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்தியா, ஹர்லின் தியோலின் 46 ரன்கள் மற்றும் ரிச்சா கோஷின் அதிரடி 35 ரன்கள் (20 பந்துகள்) உதவியுடன் 50 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தது. 248 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், சிட்ரா அமின் மட்டும் தனி ஆளாக போராடி 81 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீராங்கனைகள் நிலைக்காததால், பாகிஸ்தான் 43 ஓவர்களில் 159 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா சார்பில் கிராந்தி கவுட் மற்றும் தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வழக்கமான தோல்வியை தழுவிய பாகிஸ்தானின் ஆட்டத்தில், களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணி கேப்டன்களான ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாத்திமா சனா ஆகியோர் கை குலுக்கிக் கொள்ளவில்லை. 22வது ஓவரில் பந்தை தடுத்த ஹர்மன்பிரீத் கவுரை, பாகிஸ்தான் வீராங்கனை நஷ்ரா முறைத்து பார்க்க, ஹர்மன்பிரீத் கவுர் வார்த்தைகளால் பதிலடி கொடுத்தது சர்ச்சையானது. மேலும், 34வது ஓவரில் பூச்சிகளின் தொல்லையால், பாத்திமா சனா பூச்சிக் கொல்லி ஸ்பிரே அடித்த நிகழ்வும் கவனம் பெற்றது.
விறுவிறுப்பும், சர்ச்சையும் நிறைந்த இந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.