பாகிஸ்தானின் சீனத் தயாரிப்பான JF-17 பிளாக் III போர் விமானங்களுக்கு RD-93MA எஞ்சின்களை ரஷ்யா வழங்குவதாக வெளியான செய்திகளை ரஷ்யா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
உயர்மட்ட ரஷ்ய வட்டாரங்கள் ஊடகத்திடம் பேசுகையில், இந்த செய்திகள் பொய்யானவை என்றும், இந்தியா-ரஷ்யா இடையேயான வலுவான ஒத்துழைப்பை குலைக்கும் முயற்சி என்றும் தெரிவித்தன. "இந்தியா கவலைப்படும் அளவுக்கு பாகிஸ்தானுடன் இராணுவ ஒத்துழைப்பு இல்லை" என்றும் ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த செய்திகளை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிறது என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். இது பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் அவர் விமர்சித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகவே இரு நாடுகளின் உறவில் பிளவை ஏற்படுத்த இந்தச் சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ளதாக ரஷ்யா கருதுகிறது. இருப்பினும், தனது நட்பு நாடான இந்தியாவுக்கு கவலையளிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ரஷ்யா ஈடுபடாது என்று புடின் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.