தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான ஹசீம் அம்லா அனைத்து விதமான சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் அறிவித்த ஓய்வால் அந்த அணி தடுமாறி வருகிறது. இந்நிலையில் இன்னொரு ஜாம்பவான் வீரரான ஆம்லாவும் அனைத்து விதமானப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் ஆம்லா குறைந்த இன்னிங்ஸ்களில் 2000 முதல் 7000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28 சதங்கள் உட்பட 9282 ரன்களையும், 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 27 சதங்கள் உட்பட 8113 ரன்களையும், 44 டி20 போட்டிகளில் விளையாடி 1277 ரன்களை சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் 18,762 ரன்களை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.