டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் சிறப்பானப் பங்களிப்பை செய்துள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சோயிப் அக்தர் ஆகியோர் வரிசையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகச்சிறு வயதிலேயே (17 வயது) சூதாட்டப் புகாரில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார் அமீர்.
பின்னர் நன்னடத்தைக் காரணமாக சீக்கிரமே விடுதலையான அமீர் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த உலகக்கோப்பையில் கூட சிறப்பாக விளையாடி 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 119 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட போதும் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்துள்ளார். தற்போது 27 வயதே ஆகும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அமீர் சீக்கிரமே ஓய்வுபெறுவது உலகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.