புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்குமா நடக்காதா என்பது குறித்துப் பல விவாதங்கள் நடந்து வருகின்றன.
காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த தாக்குதல் இப்போது கிரிக்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் இனி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பைலேட்ரல் சீரிஸ் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலானப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. பிசிசிஐ தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை உலகக்கோப்பைப் போட்டிகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ‘ இந்தியா பாகிஸ்தானோடு விளையாட மறுத்தால் அவர்களுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்தியா அந்த 2 புள்ளிகள் இல்லாமலேயே இறுதிப் போட்டிக்கு செல்லும் தகுதி வாய்ந்த அணிதான். ஆனால் இந்தியா பாகிஸ்தானைப் புறக்கணிப்பதைக் காட்டிலும் அவர்களை வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும். உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிகள் பற்றி அனைவரும் அறிவோம். அவர்களோடு வென்றால் கண்டிப்பாக நாம்தான் வெல்வோம். விளையாடாவிட்டால் பாகிஸ்தான் வெல்லும். பாகிஸ்தானுக்குத் தடை விதிக்கவேண்டும் என பிசிசிஐ, ஐசிசிக்கு விதித்துள்ள கோரிக்கை வெற்றிப் பெறாது.’ எனக் கூறியுள்ளார்.