இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்து ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசியது இந்த வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.
முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் எடுத்த ஆகாஷ் தீப், போட்டிக்கு பிறகு பேட்டி அளித்தபோது, தனது சிறப்பான ஆட்டத்தை கடந்த சில மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வரும் தனது சகோதரிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
"இதுவரை நான் இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் சகோதரிக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. என் ஆட்டத்தால் அவர் மகிழ்ச்சி அடைவார், இது அவருக்கு ஒரு புன்னகையை கொடுக்கும் என்று நான் நினைத்தேன். நான் ஒவ்வொரு பந்தையும் போடும்போது என் சகோதரியின் நினைவும், என்னுடைய சிறப்பான ஆட்டத்தால் அவர் மகிழ்ச்சி அடைவார் என்ற எண்ணமும் தான் என்னுடைய மனதில் தோன்றியது.
எனவே இந்த ஆட்டம் அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அக்கா, உன்னுடன் நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்று சொல்ல விரும்புவதற்காகவே என்னுடைய ஆட்டம் அமைந்தது" என்று அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு தனது சகோதரியின் புற்றுநோய் குறித்துப் பேசினார். இதைக் கேட்ட ரசிகர்கள் பெரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.