மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் தனது அண்ணியை பற்களால் கடித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இதற்கு நீதிபதி அளித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் அடிதடியில் இறங்கி கொண்டார்கள். அந்த நேரத்தில், நாத்தனார் தனது அண்ணியை பற்களால் கடித்துள்ளார்.
இதனை அடுத்து அண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் "பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்" என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இருந்தபோதிலும், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட பெண், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "மனித பற்களால் கடிப்பதை பயங்கர ஆயுதங்களாக கருத முடியாது" என்றும், இதனால் "பயங்கர ஆயுதங்கள் மூலமாக காயம் ஏற்படுத்தியதாக" பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், மருத்துவ சான்றிதழில் "லேசான காயம்" தான் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்ததால், சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தியதற்கு நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.