தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி, கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் தஞ்சாவூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம் பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த அன்பரசன் - கலைவாணி ஆகியோருக்கு 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அன்பரசன் என்பவர் உள்ளூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்த சத்யா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவும் இதே பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபம் அடைந்த கலைவாணி, அம்மிக்கல்லை எடுத்து, அன்பரசன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதன் காரணமாக, ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்பரசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார், கலைவாணியை கைது செய்து, அன்பரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்களுடைய இரண்டு மகன்கள் ஆதரவின்றி இருப்பது, அந்த பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.