தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா? அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என சமீபத்தில் சென்னை வந்த அமைச்சர் தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி தொடர்பாக இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், அந்த கூட்டணிக்கு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து, அகில இந்திய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்" என மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
திமுக பெண்களுக்கு எதிரான கட்சியாகவே உள்ளது என்றும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார். "இப்படி ஒரு கட்சி இருக்க வேண்டுமா என்பதை 2026ஆம் ஆண்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கேற்பவே நயினார் நாகேந்திரன் பதிலளித்ததாக கூறப்படுகிறது