நகையை திருடியதாக கூறி அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், அவர் மீது குற்றம் சாட்டிய நிகிதாவை ஏன் இன்னும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருவது காவல்துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் குமார் மீது, நிகிதா என்பவர் தனது பத்து சவரன் நகையைத் திருடிவிட்டதாகத்தான் காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில்தான் அஜித் குமார் அடித்து கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், நிகிதா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எழுத்துபூர்வமாக புகார் அளிக்காமல், வாய்மொழியாகவே கூறியதாகவும், அதனை கொண்டே அஜித் குமார் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தொடர்பு கொண்டு நிகிதா பேசியதாகவும், அதன் பிறகுதான் அஜித் குமார் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அரசியல் பிரமுகர்களுடன் நெருக்கமாக இருக்கும் நிகிதாவை ஏன் இன்னும் கைது செய்து விசாரிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாலிபர் அஜித் குமார் மீது நிகிதா உண்மையில் புகார் அளித்தாரா, அல்லது வாய்மொழியாக புகார் அளித்திருந்தாலும் அது பொய்ப் புகாரா என்ற கோணத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொய்ப் புகார் என்பது தெரியவந்தால், நிகிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு, சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.