அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில் இன்று மாலைக்குள் முடிவு தெரியும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் அணியனரை சந்தித்து இடைத்தேர்தல் விவகாரம் குறித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கமாகும். இன்னொரு கட்சியின் பலவீனத்தை வைத்து வளர நினைத்தால் அது நிலைக்காது. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறித்தினோம். ஆனால் அவரை ஆதரிக்க சில கோரிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்துள்ளார்.
வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.