பாட்ஷா பட பாணியில் தலைமறைவாக வாழ்ந்து வந்த மாஃபியா கும்பல் தலைவனை பிரான்சில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாட்ஷா திரைப்படத்தில் மும்பையில் பாட்ஷாவாக வாழ்ந்த ரஜினிகாந்த் பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி சென்னையில் சாதாரண ஆட்டோக்காரனாக வாழ்வார். அதுபோன்ற உண்மை சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது.
இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்ற பின்னணிகளில் செயல்படும் மாஃபியா கும்பல்கள் அதிகமாக உள்ளது. அப்படி பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மாஃபியா கும்பலின் தலைவன்தான் எட்ஹர்டோ கிரிகோ. இத்தாலியின் மாஃபியா கும்பலான ட்ரன்ங்ஹிடாவின் தலைவனான கிரிகோ மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் எதிர் மாஃபியா கும்பலை சேர்ந்த இரண்டு பேரை கிரிகோ அடித்து கொன்று ஆசிட் ஊற்றி எரித்த சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை. கடந்த 2006ம் ஆண்டு கிரிகோவை கைது செய்ய இத்தாலி போலீஸ் பிடி வாரண்ட் பிறப்பித்தது.
அதனால் இத்தாலியிலிருந்து தப்பித்து சென்ற அவர் பிரான்சிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார். பிரான்சில் நுழைந்த அவர் தனது பெயரை போலோ டிமிட்ரியோ என்ற மாற்றிக் கொண்ட அவர் பிரான்சிலுள்ள உணவகங்களில் பீட்சா தயாரிப்பவராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் பிரான்சின் செயின்ட் இடினி நகரில் மற்றொருவருடன் கூட்டு சேர்ந்து சொந்தமாக பீட்சா கடை ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த உணவகத்தை விளம்பரப்படுத்த உள்ளூர் டிவி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போதுதான் அவரது முகம் வெளியே தெரிய வந்து இண்டெர்போல் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிரிகோவை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.