கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் நேரில் சந்திக்காதது குறித்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, உயிரிழந்தோர் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் விஜய் ஆறுதல் கூறினார்.
தற்போது, கரூருக்கு நேரில் சென்று சந்திக்கும் திட்டத்தை மாற்றி, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் சந்தித்து பேச விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, கரூர் நெரிசல் சம்பவம் மற்றும் விசாரணை காரணமாகத் தொண்டர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், விஜய் மீண்டும் களப்பணிக்குத் திரும்ப உள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இனி மக்கள் சந்திப்பு மற்றும் சாலை பேரணிகளை தவிர்த்துவிட்டு, பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கூட்டம் என்ற அடிப்படையில், மாலை 3 முதல் 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.