கரூர் மாவட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி 20 நாட்கள் ஆகியும், நடிகர் விஜய்யும் அவரது தமிழக வெற்றிக் கழகமும் மௌனம் காப்பது சரியல்ல என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
"கரூர் சம்பவத்திற்கு அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றாலும், விஜய்க்கும் பொறுப்பு இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? மக்களின் கதறல் காதில் விழவில்லையா? அவர் மற்றவர்களிடம் அறிவுரை கேட்பதை நிறுத்திவிட்டு, தாமாக முடிவெடுத்து வெளியே வர வேண்டும்," என்று கடுமையான விமர்சனம் வைத்தார் கஸ்தூரி.
விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வருவது குறித்து கூறிய கஸ்தூரி, கரூர் சம்பவத்தை வைத்து திமுக, த.வெ.க-வை முடக்கப் பார்க்கிறது, எனவே திமுக ஆட்சியை அகற்ற விரும்பும் விஜய், அரசியல் அனுபவமின்மையால் பாஜக கூட்டணிக்குள் வருவது அவருக்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.
"பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; தொண்டர்களுக்குக் கஷ்டம்," என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.