நடிகர் விஜய்யும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சந்தித்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கமளித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களி சந்தித்த கே.எஸ். அழகிரி, "கரூர் விவகாரத்திற்காக எல்லாம் கூட்டணி மாறாது; உடையாது. எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான பலமான கூட்டணி," என்று உறுதிபட தெரிவித்தார்.
அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்த பின்னரே ராகுல் காந்தி விஜய்யை சந்தித்ததாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அழகிரி, "செல்வப்பெருந்தகை அந்த பொருளில் பேசவில்லை. நீங்கள் அதுபோன்று உருவாக்க வேண்டாம். எங்கள் தலைவர் ராகுல் காந்தி அகில இந்தியத் தலைவர். விஜய் ராகுல் காந்திக்கு நீண்ட கால நண்பர். பலமுறை சந்தித்து பேசியிருக்கிறார். ராகுலை சந்திக்கவோ, பேசவோ விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நேரடியாக, அவர் விரும்பும் போதெல்லாம் பேசலாம். எனவே, இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை," என்று தெரிவித்தார்.