மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது புதிய மின்னஞ்சல் முகவரியை தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் பாணியில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் வணக்கம், நான் ஜோஹோ மெயிலுக்கு மாறியுள்ளேன். எனது மின்னஞ்சல் முகவரியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். எனது புதிய மின்னஞ்சல் முகவரி [email protected] ஆகும். எதிர்கால மின்னஞ்சல் தொடர்புகளுக்கு, தயவுசெய்து இந்த முகவரியை பயன்படுத்தவும்," என்று அந்தப் பதிவில் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இங்கு, அமித்ஷா தனது அறிவிப்பைப் பேசும் முறையில் பயன்படுத்திய உற்சாகமான மற்றும் அழுத்தமான தொனி, பொதுவாக டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவுகளை நிறைவுசெய்யப் பயன்படுத்தும் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சர்வதேச வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில், மத்திய அரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா, உள்நாட்டிலேயே வளர்ந்த ஜோஹோ போன்ற ஒரு மென்பொருள் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த தொடங்கியிருப்பது, அரசின் 'சுதேசி தொழில்நுட்ப' கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.