பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பூசல்கள் எழுந்துள்ளன. முன்னாள் முதலமைச்சரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, தங்கள் கட்சிக்கு குறைந்தபட்சம் 15 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், தங்கள் கட்சி NDA கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வதாக கூறிய மஞ்சி, தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க மரியாதையான தொகுதிகள் தேவை என்று வலியுறுத்தினார். பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, மஞ்சுவை சமாதானப்படுத்தி வருகிறார்.
மஞ்சி தனது கோரிக்கையை உணர்த்த, புகழ்பெற்ற கவிஞர் ராம்தாரி சிங் தின்கரின் 'ரஷ்மிரதி' காவியத்தின் வரிகளை மாற்றி, "15 கிராமங்களை மட்டும் கொடுங்கள்" (15 தொகுதிகளைக் குறிக்கும் வகையில்) என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
தற்போதைய தகவல்களின்படி, மஞ்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல், சிராக் பாஸ்வானும் 40 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் NDA கூட்டணியில் தொகுதி பங்கீட்டுச் சிக்கல் நீடிக்கிறது.