Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெகாசுஸ் உளவு… உச்சநீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு – விசிக அறிக்கை!

பெகாசுஸ் உளவு… உச்சநீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு – விசிக அறிக்கை!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (15:44 IST)
உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள பெகாசூஸ் ஒட்டுகேட்பு சர்ச்சை சம்மந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ‘பெகாசுஸ் என்ற உளவு செயலியின் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரதும் தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதை ஒன்றிய அரசு மறுத்தாலும், ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரச்சனை குறித்து விசாரித்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுயேச்சையான ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று ஒன்றிய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இஸ்ரேல் நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகாசுஸ் என்ற உளவு செயலி அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பது என்று அந்நாடு முடிவு செய்திருக்கிறது. அந்த செயலி இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது என்று 2019 ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுபோல பல நாடுகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையொட்டி உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கெனத் தனியே புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதனடிப்படையில் இப்பொழுது சுமார் 50,000 தொலைபேசி எண்கள் பெகாசுஸ் செயலியால் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. 10 நாடுகளில் இத்தகைய உளவு செயலியை அரசாங்கங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று என்ற அதிர்ச்சி தரும் தகவலை இந்த ஊடக நிறுவனங்கள் கூட்டாக வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதி, தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலதரப்பினரதும் தொலைபேசி எண்களும் இந்த உளவுச் செயலியால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது உரையாடலை ஒட்டுக்கேட்கும் செயலி மட்டுமல்ல, இதை ஒருவரது தொலைபேசியில் அவருக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து அந்தத் தொலைபேசியை வெளியிலிருந்து இயக்க முடியும். தொலைபேசியில் இருக்கும் மைக்ரோபோன், காமிரா முதலானவற்றையும் அவருக்குத் தெரியாமலேயே செயல்படுத்த முடியும். இது இஸ்ரேல் அரசாங்கத்தால் இணையவழி ஆயுதம் என வகைப்படுத்தப்பட்ட ஒரு செயலியாகும். அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும் குடிமக்களின் அந்தரங்கத்தை உளவுபார்க்கும் இந்த பெகாசுஸ் கருவியை இந்திய அரசு பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இதுகுறித்த உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க ஒன்றிய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச் சி எல் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த ஷிவ் நாடார்!