முரசொலி அலுவலகம் அமைந்திருப்பது பஞ்சமி நிலம் என்று சொல்லி வைகோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக பாஜக முன்னணித் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பஞ்சமி நிலம் குறித்து வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் பேசியது. அதைப்பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் எனக் கூற, திமுகவின் முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலம்தான் என ஸ்டாலினுக்கு ஒரு யார்க்கரை வீசினார் பாமக நிறுவனர். அதற்கு ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்து ஸ்டாலின் முரசொலி அலுவலகத்தின் பட்டா பத்திரத்தைக் காட்டினார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என வைகோவே முன்பே ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதனால் திமுக அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். பொன்னாரின் இந்த எதிர்பாராத தாக்குதலுக்குப் பதிலளித்த வைகோ ‘அப்போதைய சூழ்நிலையில் நான் அத்தகைய கருத்தைத் தெரிவித்து இருக்கலாம். ஆனால் அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். தற்போது ஸ்டாலின் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.