தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரையை மேலும் நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். முன்னதாக திருச்சி, அரியலூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த அவர் வரும் சனிக்கிழமை கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
முன்னதாக ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 மாவட்டங்கள் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் விஜய்யை காண ஏராளமான மக்கள் கூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 மாவட்டங்கள் என திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 20ம் தேதியுடன் சுற்றுப்பயணத்தை விஜய் முடிக்க இருந்த நிலையில் அதை பிப்ரவரி 21 வரை நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் செல்ல திட்டமிட்டு முடியாமல் போன நிலையில் விடுபட்ட மாவட்டங்களிலும் விஜய் பிரச்சாரம் செய்வதற்காக இவ்வாறு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் நிறைய நேரம் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காக விஜய்யின் பிரச்சார பயணம் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K