பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் தனது ஆதரவை அந்த மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தவெக தலைவர் விஜய், போராட்டம் செய்யும் மக்களை நேரில் சந்திக்கிறார்.
இதற்காக பரந்தூர் சென்றுள்ள அவர் கேரவனிலிருந்து மக்கள் கூடியிருந்த பகுதியில் மைக் வழியாக பேசினார். அதில் அவர் “கிட்டத்தட்ட 910 நாட்களாக போராடி வருகின்றீர்கள். உங்கள் போராட்டம் பற்றி ராகுல் என்ற பையன் பேசியிருந்த வீடியோ என் மனதை ஏதோ செய்து விட்டது. உடனடியாக உங்களை பார்க்க வேண்டும், உங்களுடன் பேச வேண்டும் என வந்தேன். உங்களை போன்ற விவசாயிகளின் கால் மண்ணை தொட்டுதான் எனது கள அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என விரும்பினேன். அதன்படி இங்கே தொடங்குகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையிலேயே இயற்கை பாதுகாப்பை, விவசாய பாதுகாப்பை குறிப்பிட்டுள்ளோம். இந்த பிரச்சினையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன். சட்ட நடவடிக்கையை தவெக தொடங்கும்.
பருவநிலை மாற்றத்தால் சென்னை பெரும் வெள்ளத்தை அதிகம் எதிர்கொள்கிறது. அதற்கு காரணம் சென்னை சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் அழித்ததுதான்.
வளர்ச்சி என்பது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களை, விவசாயிகளை வஞ்சித்து இந்த பகுதியில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. இந்த விஷயத்தில் நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் என்றும் உங்களுக்கு ஆதரவாக நிற்போம்.
வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்கக் கூடாது. உங்கள் விமான நிலையத்தை அதிகம் பாதிப்பு இல்லாத, விவசாய நிலங்கள் இல்லாத ஏதாவது ஒரு பகுதியில் அமையுங்கள்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K