அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தவெக - பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று மதுரையில் பாஜக மகளிரணி நீதி யாத்திரை நடத்துகின்றனர். அதில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மதுரை வந்தடைந்துள்ளார்.
அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “திமுக ஆட்சி காலத்தில் ஜனநாயகம் இல்லை. யாராவது கை நீட்டி கேள்வி கேட்டால் அவர்களை கைது செய்வதும், வழக்குப்பதிவு செய்வதும்தான் தமிழ்நாட்டில் நடக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதைப்பற்றி பேச வேண்டாம் என திமுக அமைச்சர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது போல இங்கு யாரும் அரசியல் செய்யவில்லை. நீதிமன்றம் இதுகுறித்து சொல்லியிருப்பதால் அதை மதித்து அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம். நியாயம் கிடைக்கவே போராடுகிறோம்.
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குரல் கொடுத்துள்ளார். அவரை போலவே அனைவரும் அதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஆனால் குரல் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்க கூடாது. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவினர் விஜய்யை ஆதரிப்பதால் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் தவெகவுடனான கூட்டணி குறித்து பாஜக மேலிடம்தான் பதில் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K