சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டு, மேலும் அவை 21.05.2025 (புதன்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
1. ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) இருந்து சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
2. காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும், மேலும் அவ்வாகனங்கள் நேராக (மத்திய கைலாஷ் நோக்கி) செல்ல அனுமதிக்கப்படாது.
3. இந்த மாற்றுப்பாதைகளை ஏற்படுத்த, சிஎல்ஆர்ஐ பேருந்து நிறுத்தம் ஏற்கெனவே உள்ள இடத்திலிருந்து அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது