விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆவடியில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஈழத் தமிழர்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்ட விவகாரத்தில் கூட்டாட்சி முறையை உறுதி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து பேசிய அவர், தமிழக அரசியல் நகர்வுகளில் பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், த.வெ.க. தனித்துவத்துடன் இயங்குகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டால்தான், அவர்கள் அந்த கட்சி மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று தெளிவுபடுத்தினார். பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கிற தோற்றம் உருவானால், தமிழக மக்கள் த.வெ.க.வை எதிரியாகவே பார்ப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், "விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது பா.ஜ.க.வுடன் அவர் காட்டுகிற இணக்கம் மற்றும் அணுகுமுறை நிச்சயமாக அவருக்கு பயன் தராது" என்று திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தைக் குறிவைத்து பா.ஜ.க. அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.