Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயகத்தின் மேல் விழுந்த பெரிய அடி இது! ராகுல்காந்தி கைது! - கமல்ஹாசன் கண்டனம்!

Advertiesment
Kamalhassan Rahul Gandhi

Prasanth K

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (09:40 IST)

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்யப்பட்டது குறித்து மாநிலங்களவை எம்.பி கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் “அன்பார்ந்த இந்திய மக்களுக்கு,

ஓர் அரசியல்வாதியாக அல்ல, கலைஞனாகவும் அல்ல, இந்த நாட்டையும் இதன் முழு அர்த்தத்திலான ஜனநாயகத்தையும் நேசிக்கும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சம் சசு இந்தியக் குடிமகனாக இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

நமது வாக்காளர் பட்டியல் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் சரிபார்க்கும் வடிவத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட ஏன் மறுக்க வேண்டும்? எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டும் தரவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன எனும்போது, அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியை ஆணையம் ஏன் கேட்கிறது? மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் சந்தேகத்திற்கிடமான சேர்க்கைகள் அம்பலப்படுத்தப்படும்போது, பீகாரில் இப்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் பெயரில் (ஸ்பெஷல் இன்டென்ஸிவ் ரிவிஷன்) பெருமளவிலான நீக்கல்கள் ஏன் செய்யப்படுகின்றன?

என்னுடைய சகோதர் திரு. ராகுல்காந்தியும், இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பி, ஜனநாயகத்தின் மக்கள் மன்றமான இந்திய நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை அமைதியாக நடந்து சென்றதற்காகக் கைது செய்யப்பட்டனர். வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகப் போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம். விடுதலையடைந்த முதிர்ச்சியுற்ற குடியரசு நாட்டில் நடக்கக் கூடாத சம்பவம் இது.

நமது ஜனநாயகம் என்பது ஒரு தானியங்கி கருணாலயம் அல்ல. தங்களது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தம்மை ஆளும் வகையில், இந்திய மக்கள் தங்களது கண்ணீரையும் செந்நீரையும் சிந்தி, உயிரைக் கொடுத்து போராடி காலனி ஆட்சியை தூக்கி எறிந்தார்கள். நமது ஜனநாயகம் என்பது லட்சக்கணக்கான இந்தியர்களின் இரத்தத்தாலும் உழைப்பாலும் முத்திரையிடப்பட்ட ஒரு உடன்படிக்கை. போர்கள். கொடும்பஞ்சங்கள், கலவரங்கள், இயற்கைப் பேரழிவுகள் என அபாயம் எவ்வடிவில் நேர்ந்தாலும், நமது வாக்களிக்கும் உரிமையும் அதன் உண்மைத்தன்மையும் அப்படியே நீடிக்கிறது. வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும்போது, அது வெறும் ஒரு சிறிய அரசியல் சச்சரவு அல்ல. சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் இஃதொரு தார்மீக நெருக்கடி.

தற்போதைய இந்தியத் தேர்தல் ஆணையம். இதற்கு முன்னால் இதே பதவிகளை வகித்த சிறந்த அதிகாரிகளை நினைவில்கொண்டு, பாரபட்சமற்ற, அச்சமற்ற, அரசியலுக்கு அப்பாற்பட்ட டி.என்.சேஷன் போன்ற தேசப்பற்றுள்ள அதிகாரிகள் முன்னுதாரணமாக வைத்திருந்த தரத்திற்கு உயரவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். வாக்குச் செலுத்திய வாக்காளர் பட்டியல்களை இயந்திரத்தால் வாசிக்க முடிகிற வடிவத்தில் வெளியிடுங்கள். அந்தப் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்ட வேண்டும். அதிகாரத்தின் வார்த்தைகளால் சொல்வதை விட, மக்களே உண்மையை நேரடியாகப் பார்க்கட்டும்.

இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (பா.ஜ.கூ கூட்டணியில்) உள்ள சகோதரர்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளையும், வெளிப்படைத்தன்மைக்காக ஒன்றுபடுமாறு நான் அழைக்கிறேன். இந்தக் கோரிக்கையை, கிராமம் முதல் நகரம் வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்வோம். இது நமது வாக்குகளைப் பாதுகாக்கவும். நம் குடியரசைப் பாதுகாக்கவும் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.

நமது ஜனநாயகத்தின் ரூபிகான் (rubicon) கோட்டை யாகும் தாண்ட நாம் அனுமதிக்க மாட்டோம். அது திருத்தவே முடியாத சீரழிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும். இந்தியாவே எழுக. சரியான பதில் வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்புக. அரசியலுக்காக அல்ல, நம் நாட்டின் எதிர்காலத்துக்காக” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றிவிட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்? மேனகா காந்தி