Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன்! - ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் புகழாரம்!

Draupati Murmu
, ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (08:54 IST)
ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்ட மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு குடியரசு தலைவர். திரெளபதி முர்மு அவர்கள்   "முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்" என குறிப்பிட்டு பேசினார்.

 
ஓம் நமசிவாய என்ற மந்திரத்துடன் தன் உரையை தொடங்கிய குடியரசு தலைவர் விழாவில்  பேசியதாவது,  "ஓம் நமசிவாய! சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவையனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார் அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார். அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி.  சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார்.

ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும் இருக்கிறார். அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மஹாசிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

 
webdunia

 நவீன காலத்தின் போற்ற தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு அவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மீக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். குறிப்பாக ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார்.

அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வையும் கற்றுக்கொடுக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்த மஹா சிவராத்திரி நன்நாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். மேலும் வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்களிக்கட்டும். இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும்." இவ்வாறு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேசினார்.

இவ்விழாவில் சத்குரு அவர்கள் பேசுகையில் "மஹா சிவராத்திரி விழாவிற்கு வருகை தந்துள்ள குடியரசு தலைவருக்கு எங்கள் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மஹா சிவராத்திரி தினமானது சொர்கத்துக்கு செல்வதற்கான நாளல்ல. எந்தவித சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையையும் கொடுக்கும் நாளும் அல்ல.  உங்களுக்குள் உண்மைக்கான தேடுதலை தீவிரப்படுத்தும் நாள். நம்முடைய பாரத தேசத்தில் 50 கி.மீ பயணித்தாலே அங்கு வாழும் மக்களின் உணவு பழக்கம், பண்பாடு போன்றவை வேறுபடுகின்றன. மொழி, இனம், ஜாதி, கலாச்சாரம் போன்ற ஏராளமான முறைகளில் நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தாலும் நம்மை வெளிநாட்டவர்கள் ஒற்றை தேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் நாம் வாழ்நாள் முழுவதும் உண்மையை தேடும் தேடல்மிக்கவர்களாக இருக்கிறோம். நம்பிக்கையாளர்களாக அல்ல. எந்த பிரச்சனைகளின் போதும் நாம் முடிவுகளை தேடி செல்பவராக இல்லாமல், தீர்வு காணும் தேடல் மிக்கவர்களாக இருக்கிறோம். இந்த தேடலை இந்த மஹா சிவராத்திரி நாளில் மேலும் தீவிரப்படுத்துங்கள்" என்றார்

webdunia

 
முன்னதாக, மாலை 6 மணியளவில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களை சத்குரு அவர்கள் வரவேற்றார். பின்னர் அவர் ஈஷா மையத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு உடன் அழைத்து சென்று அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சூர்ய குண்டம், நாகா சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட குடியரசு தலைவர் நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து லிங்க பைரவி கோவிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார்.  பின்னர் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார். குடியரசு தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி, தமிழ்நாடு மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் போர்; 30 ஆயிரம் ரஷ்ய கூலிப்படையினர் பலி!