பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து சொன்ன இளையராஜா குறித்த அவதூறுகள் குறித்து ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜா குறித்த அவதூறு கருத்துகள் குறித்து வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் “இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.