டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு திரும்பப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை செய்த நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக அறிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் அதில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டு, "டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்பெற்றது.
"டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" என ஏன் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் ரகுபதி, "உச்சநீதிமன்றத்தில் வேறு மாநிலத்துக்கு மாற்ற மனு தாக்கல் செய்யவில்லை" என்று கூறினார். ஆனால் இன்று அந்த மனுவை திமுக அரசு வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.