டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று பேட்டியளித்தபோது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்பதாகவும், "ஏன், உங்களுக்கு பயமா?" என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சட்ட அமைச்சர் ரகுபதி, "எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயமில்லை. எங்களது கவுண்டரை அவர் ஒழுங்காகப் படித்துப் பார்க்கவில்லை; எங்களது கோரிக்கையையும் அவர் சரியாகப் பார்க்கவில்லை," என கூறினார்.
"உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகள், மற்ற வழக்குகள், டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோம். தவிர, வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை.
"ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதை சரியாக புரிந்து கொள்ளாமல் பேட்டியளித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை, டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன் வைத்துள்ளோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.