தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார். கல்வி மத்திய பட்டியலிலிருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மாநில பட்டியலுக்குள் கல்வி வரவேண்டிய முக்கியத்துவம் குறித்து பேசும் போது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது என்றார். அதோடு, நீட் தேர்வு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கே பயனுள்ளதாக இருப்பதையும், அது பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதால், கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
மாநில பட்டியலிலிருந்து கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றியதன் பின்னணியில், மும்மொழி கொள்கை' என்னும் போர்வையில் இந்தி மொழியை மறைமுகமாக திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மாநில சுயாட்சியை உறுதி செய்யும் வகையில், புதிய உயர்நிலைக் குழு ஒன்றை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.