உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் செய்த பதிவில் உள்ளத்தில் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,
எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!
முன்னதாக மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது என்பதும் தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே தமிழ் ஆங்கிலம் என இரு மொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என அதிமுக தரப்பில் இருந்து திட்டவட்டமாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.