அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது என்றும் அவரவர் வேலையை அவரவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது குறித்து ஓபிஎஸ் இடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசிவிட முடியாது. அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் கிடையாது. அமைதியாக அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது என்று தெரிவித்தார்.
மேலும், நான் ஒரு சாதாரண தொண்டன், என்னிடம் கேட்கும் கேள்விகளை மட்டும் என்னிடம் கேளுங்கள். மற்றபடி கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் இடம் கேட்க வேண்டும் என்று மற்றவர் கேள்விக்கு பதில் கூறினார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எடப்பாடி பழனிச்சாமி தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை. அதில் கலந்து கொள்ளவில்லை என்று நான் ஏற்கனவே கூறினேன் என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.