அதிமுகவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இதில் ஓ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம், அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியை ஒருங்கிணைக்க போராடி வருவதாகவும், அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார். அதிமுக ஒருங்கிணைந்த பின்னர், தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விரைவில் ஒரு சாதாரண தொண்டர் வருவார் என்றும், பொதுச்செயலாளர் என்ற பதவியை அதிமுகவில் இருக்காது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தால் அவரை கட்சியில் இணைக்க பரிந்துரை செய்வேன் என்று ராஜன் செல்லப்பா கூறிய நிலையில், தனக்காக யாரும் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.