மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு சிலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தினசரி காய்கறி சந்தையின் பிரதான சாலையில் உள்ள பொது நுழைவாயிலுக்கு அருகில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
பொது இடங்களில் சிலைகள் அமைப்பதற்கு அனுமதி மறுத்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த மனுவை வாபஸ் பெற்று, உரிய நிவாரணம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், பொது இடங்களில் சிலைகள் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
அரசியல் தலைவர்களுக்கான நினைவு சின்னங்கள் மற்றும் சிலைகளுக்காக பொது இடங்களையும், வரி செலுத்துவோரின் பணத்தையும் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.