ஒரே பணிக்கு ஒரே ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளது.
தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த ஊதிய முரண்பாடு காணப்படுகிறது. மே 31 அன்று நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியமும், அதற்கு மறுநாள், ஜூன் 1 அன்று நியமிக்கப்பட்டவர்களுக்கு வேறு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் வித்தியாசத்தால், சுமார் 20,000 ஆசிரியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 வரை இழப்பு ஏற்படுகிறது.
இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய 2023-இல் அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக்கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்க வலியுறுத்தியும், ஆசிரியர் இயக்கம் இந்த தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு சிக்கல் என கூறப்படுகிறது.