திருப்பூரில் ரோந்து பணிக்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் தலை வெட்டிக் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். நேற்றிரவு இவர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பகுதியில் தந்தை - மகன் இடையே ஏதோ கைகலப்பாகிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. உடனே இந்த தகவல் ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ சண்முகவேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரும் மற்றொரு காவலரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில்தான் பிரச்சினை நடந்துள்ளது. தோட்டத்தில் வேலை செய்து வந்த மூர்த்திக்கும் அவரது மகன் தங்கபாண்டியனுக்கும் சண்டை. இதில் தங்கபாண்டியன் கடுமையாக மூர்த்தியை தாக்கியிருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்ற சண்முகவேல் அவர்களை சமாதானம் செய்து மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென தங்கபாண்டியன் ஆவேசமாக எஸ்.ஐ சண்முகவேல் மீது பாய்ந்து தலையை வெட்டிக் கொடூரமாக கொன்றுள்ளார். மேலும் உடன் வந்த காவலர் அழகுராஜையும் துரத்திச் சென்றுள்ளார். அவர் தப்பி சென்று காவல் நிலையத்தில் நடந்ததை சொல்லியுள்ளார். தற்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தங்கபாண்டியன் தேடப்பட்டு வருகிறார். திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K