திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் பணியின்போது வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகிய இருவரும் மதுபோதையில் சண்டையிட்டுள்ளனர். தங்கபாண்டியன் தனது தந்தையை தாக்கியதால், அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அவர் காயமடைந்த மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், அரிவாளால் சண்முகவேலை வெட்டி கொன்றார். உடனிருந்த காவலரையும் அவர் துரத்தியுள்ளார். தகவல் அறிந்து காவல் துறையினர் வருவதற்குள் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தங்கபாண்டியனைத் தேட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சண்முகவேலின் மறைவு காவல்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.