கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு போலீசார் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் அல்லது அனுமதி மறுக்கிறார்கள். ஏனெனில் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பல சர்ச்சைகளை கிளப்பியது. கடந்த 5ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்து தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே, சில நாட்களுக்கு முன்பு அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று அங்கு பொதுக்கூட்டம் நடத்தினார் விஜய்.
ஒருபக்கம் வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டிருக்கிறது. அதற்கான பணிகளை சமீபத்தில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் செய்து வருகிறார். ஆனால் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் தேர்ந்தெடுத்த விஜயமங்கலம் சுங்கு சாவடி அருகே உள்ள அந்த பகுதி விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. எனவே அங்கு எந்த அரசியல் கட்சிக்கும் பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என அந்த கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
எனவே வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வருகிறார். காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரிக்கு பின் தமிழகத்தில் முதல்முறையாக பிரச்சாரம் செய்ய வருகிறார் விஜய்.
நேற்று பேசும்போது தவெகவில் பலரும் இணைய வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொன்னேன். தவெக அதிமுகவாக மாறும் என்று நான் கூறவில்லை. அனைவரையும் ஒன்றிணைப்போம் என்று கூறியிருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் நான் எப்படி இருந்தேனோ அதுபோலவே இப்போது தவெகவில் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
செங்கோட்டையன் பேசுவதை பார்க்கும் போது வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசுவார் என்பது உறுதியாகியிருக்கிறது.