ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசார கூட்டம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத் துறை நிலம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலம் தங்களுடையது என்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் உரிமை கோரி வருகின்றனர். நிலத்தை கையகப்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நவம்பர் 21-ஆம் தேதி முயன்றபோது, அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதனால், இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
த.வெ.க.வினர் கோயில் நிர்வாகிகளிடம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை என்றும் தெரிகிறது. இதனால், சர்ச்சைக்குரிய இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று அறநிலையத் துறை சார்பில் காவல்துறைக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை 84 கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், டிசம்பர் 16-க்கு பதில் டிசம்பர் 18-க்கு கூட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். அறநிலையத்துறையின் எதிர்ப்புக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.