நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது அவர் மீதும், அந்த கட்சியின் மீதும் பல விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக விஜய்க்கு அரசியலில் அனுபவம் இல்லை. அதேபோல் அவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அரசியல் கட்சி நிர்வாகிகளாக மாற்றியிருக்கிறார். அவர்களுக்கும் எந்த அரசியல் அனுபவமும் இல்லை என பலரும் பேசினார்கள்.
அதை நிரூபிப்பது போலவே விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதுவும் தவெக மீது கடுமையான விமர்சனத்தை வைக்க காரணமாக அமைந்தது. அரசியலில் அனுபவமுள்ளவர்கள் தவெகவில் இல்லை. புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவர் அர்ஜுனாவுக்கும் பெரிய அளவில் அரசியல் அனுபவம் இல்லை. இவர்களை வைத்துக்கொண்டு விஜய் எப்படி அரசியல் நடத்துவார்.. இவர்களையெல்லாம் வைத்திருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று பலரும் பேசினார்கள்.
அதேபோல், அவர்களின் ஆலோசனைகளை கேட்டு விஜய் நடந்து கொள்கிறார். இப்படியே போனால் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள்.
இந்நிலையில்தான் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். எனவே, தவெக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருபக்கம் விஜயை அணுக முடியவில்லை.. விஜயை சந்திக்க முடியவில்லை.. புஸ்ஸி ஆனந்த் பற்றிய புகார்களை அவரிடம் சொல்லமுடியவில்லை என தவெக நிர்வாகிகளும் புகார் சொன்னார்கள். நடிகர் தாடி பாலாஜி கூட இந்த புகாரை சொல்லி இருந்தார்.
இந்நிலையில்தான், இன்று செய்தியாளிடம் பேசிய செங்கோட்டையன் ஜனவரி மாதத்திற்குள் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தவெகவிற்கு கொண்டுவரும் முயற்சியை நான் செய்வேன். கழகத்தை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையது. மாவட்ட செயலாளர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் இனிமேல் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என அறிவித்திருக்கிறார்.