தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் இணைந்துதான் தேர்தலை சந்தித்து வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த முறை தங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி ஆகியோர் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். இது திமுக தலைமைக்கு கோபத்தையும், நெருக்கடியையும் கொடுத்திருக்கிறது.
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, எங்களை இழிவாக திமுக பேசினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.. எங்களுக்கும் பேச தெரியும் என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இந்த முறை திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம், காங்கிரஸுடனான கூட்டணியில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ராகுல் காந்தி என்னுடைய சகோதரர் போன்றவர் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.
ஒருபக்கம், தமிழக அரசியல் நிலவரம், திமுகவுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு, மற்றும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என எழுந்திருக்கும் குரல்கள் என பலவற்றையும் விவாதிக்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுகிறோம். கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது என சொல்லியிருக்கிறது. அதைக்கேட்காமல் சிலர் பேசுகிறார்கள். ராகுலை விட, மல்லிகார்ஜுனா கார்கேவை விட, வேணுகோபாலை விட பெரிய ஆட்கள் இங்கே இருக்கிறார்களா எனக்கு தெரியவில்லை என பேசியிருக்கிறார்.