சசிகலா சிறையிலிருந்து வெளியேறியதும் அதிமுகவில் இணைய மாட்டார் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது ‘சசிகலாவை திரும்ப அதிமுகவில் சேர்த்து கொள்வீர்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் “சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்த்து கொள்வது பற்றி நான் முடிவெடுக்க முடியாது. கட்சி பொதுக்குழுவில்தான் இதுபற்றிய முடிவு எடுக்கப்படும்’ என பதில் அளித்திருந்தார்.
இதனால் விரைவில் சசிகலா விடுதலை ஆவார் என்றும், அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது அதிமுகவுடன் தனது அமமுக கட்சியை இணைத்துவிடவோ வாய்ப்பிருப்பதாக பரவலாக பேசிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமமுக டிடிவி தினகரன் ’இதுவரை அதிமுக ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. சசிகலா விடுதலையானால் அதிமுகவில் சேர்வார் என்பது நடக்காத காரியம்.’ என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்தால் அதில் அமமுக கண்டிப்பாக போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.
சசிகலா விடுதலையான பின் அமமுக கட்சியை மேம்படுத்துவதே அவரது முதல் வேலையாக இருக்கும் என அமமுக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.