விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் எண்ணிக்கையில் இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்றுள்ள நிலையில், இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் ’தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 1,09,359 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. அதே போல் நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக 59,507 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் , இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாஜகவின் பங்களிப்பு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் சொற்ப வாக்குகளே பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிரான தமிழக மக்களின் மனநிலை என்னவானது என எதிர்தரப்பினர் சந்தேகத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக பெரும் ஆதரவு தந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி முகத்தை நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.