நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டும் இன்றி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக சரியாக கூட்டணி அமைக்காதது, அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களை வெளியேற்றியது ஆகியவை தான் தோல்விக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என சசிகலா மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்
அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம், அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும் என்றும், அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் கூறிய இந்த கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.