மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கோவில் சுற்றுபயணத்தில் பிஸியாக உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ல் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்த வாக்குகளையும் எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தாங்கள் வெற்றிபெற வேண்டி பல கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி கன்னியாக்குமரியில் தியானம் செய்ய உள்ள நிலையில், அமைச்சர் அமித்ஷா இன்று திருமயம் காலபைரவர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வமும் தனது மகனுடன் கோவில் தரிசனத்தில் ஈடுபட்டு வருகிறார். ஓபிஎஸ் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருவாரூர் மாவட்டம் திருச்சிறுகுடி கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத சூட்சூமபுரீஸ்வரர் திருக்கோவில் திருஞானச்சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம் ஆகும். இந்த தலத்தில் வேண்டுவோருக்கு பெரும் பதவிகள் வந்தடையும் என்பது நம்பிக்கை.
இந்த கோவிலில் இன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் தரிசனம் செய்தனர். அடுத்ததாக அவர்கள் ராகு-கேது பரிகார ஸ்தலமான திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தனர். தேர்தல் முடிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் கோவில்களை நோக்கி படையெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.